அத்வானியின் பொறுமல், அருண் ஜெட்லியின் முனகல், சுஷ்மா ஸ்வராஜின் புலம்பல்- இதெல்லாம் தாண்டி பாஜகவில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஜம்மென்று 2014 நாடாளுமன்றத்தேர்தலில் தான் தான் பிரதமர் வேட்பாளர் என்பதை எல்லோர் மனதிலும் விதைப்பதில் வெற்றி பெற்றுவிட்டார். உத்தராஞ்சல் பேரழிவின் போது அங்கு சிக்கித் தவித்த 15,000 குஜராத் மக்களை தான் கொண்டுபோயிருந்த எண்பதே எண்பது இன்னோவா கார்களில் ஏற்றி காப்பாற்றிக் கொண்டு சென்றார் என்கிற ராம்போ கதாநாயக பிரச்சாரத்திலிருந்து சுதந்தர தின உரையில் ஒண்டிக்கு ஒண்டிக்கு வருகிறாயா என்கிற ரீதியில் பிரதமருக்கே சவால் விட்டது வரை அவரது பிம்பம் பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது. இதற்கு முக்கிய காரணமாக காங்கிரஸ் கட்சியையே சுட்டிக் காட்டுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். மோடி திட்டமிட்டு தன்னைச் சுற்றியே மத்திய அரசியல் சுழலவேண்டும் என்பதற்காக வார்த்தைகளை விடுகிறார். அதையே கப்பென்று பிடித்துக்கொண்டு காங்கிரஸ் தலைவர்களின் பொழுது அதற்கு எதிர்வினை ஆற்றுவதில் கழிந்துவிடுகிறது.
மன்மோகன் சிங்கை மோடி சுதந்தர தின விழாவில் பின்னி எடுத்தபோது வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அவரை கிணற்றுத் தவளை இப்போதுதான் வெளியே வந்து உலகைப் பார்த்து விழிக்கிறது என்றார்.
அஜய் மக்கன், திக்விஜய் சிங் ஆகியோர் தங்கள் முழு நேர வேலையாகவே மோடிக்குப் பதில்சொல்வதை மாற்றிக்கொண்டனர் போலிருக்கிறது. மோடி பிரச்சாரக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்று அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டபின் பல இந்திய செய்தி நிறுவனங்கள் பேட்டி எடுக்கத் தவம் கிடந்தபோது அவற்றை மறுத்துவிட்டு வெளிநாட்டுச் செய்தி நிறுவனமான ராய்ட்டர் நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். எல்லா செய்தியாளர்களுக்குமே பொதுவாக எப்படியாவது குஜராத் கலவரத்துக்கு மோடியை வருத்தம் தெரிவிக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதை மனதில் வைத்துக் கொண்டு குஜராத் மதக்கலவரத்தின் போது முஸ்லிம்கள் இறந்ததைப் பற்றி கேட்கப் பட்ட கேள்விக்கு நன்கு யோசித்து, காருக்கு அடியில் மாட்டிக்கொண்ட நாய்க்குட்டி இறந்துவிட்டால் காரில் செல்பவர் என்ன செய்வது என்று அவர் பதில் சொன்னார். இந்த பதிலுக்கு காங்கிரஸ் காரர்கள் மிகவும் அதிகமான முக்கியத்துவத்தை தந்து அவரை விமர்சித்தனர். மோடியின் பதில்கள் திட்டமிட்டே இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக சொல்லப்படுகிறவை என்று புரிந்திருந்தும் அவர்களால் தங்களைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. ஏற்கெனவே பாஜக ராகுல் காந்தியை ‘பப்பு’ என்று சொல்லி கிண்டல் செய்வது வழக்கம். பப்பு கிண்டலை மோடியின் பப்பி(நாய்க்குட்டி) பேச்சைப் பிடித்துக் கொண்டு காங்கிரசார் எதிர்கொண்டனர்.
பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் கமிட்டித் தலைவராகப் பதவியேற்றப் பின் அவர் கலந்துகொண்ட முதல் பொதுக்கூட்டம் புனேவில் நடந்தது. அதில்தான் அவர் நேரடியாக காங்கிரசை வம்பிழுத்தார்.“ தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஆறு ஆண்டு ஆட்சியையும் ஐமு கூட்டணியின் பத்தாண்டையும் ஒப்பீட்டுப் பார்ப்போமா ?” என்று சீறினார். ‘’காங்கிரசின் இளவரசர் ஏழை மக்களின் வீடுவீடாகப் போய்த் தங்குகிறார். அதன் மூலம் அவர் தன் முன்னோர்களின் சாதனைகளைக் காட்டுகிறார்” என்று கிண்டல் செய்தார். ‘’எப்போதெல்லாம் காங்கிரசுக்குப் பிரச்னை வருகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் மதச்சார்பின்மை என்கிற பர்தாவுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார்கள்” என்றார்.
மோடியின் நாய்க்குட்டி பேட்டிக்கு சல்மான் குர்ஷித் காட்டமாகப் பதிலளித்தார். காங்கிரஸ் காரர்கள் தங்கள் சமூக வலைத் தள ப்ரொபைல் படங்களை நாய்க்குட்டியாக மாற்றினர். அஜய் மக்கான்,
“மோடி பயன்படுத்திய உதாரணம் கண்டிக்கத்தக்கது. நாகரிகமடைந்த இந்தியாவில் இதுபோன்ற ஒப்பீடுகளுக்கு இடமே இல்லை” என்றார். இன்னொரு மத்திய அமைச்சர் பேனி பிரசாத் நாய்க்குட்டி பேட்டியால் மிகவும் கோபப்பட்டு,“ மோடி ஒரு ட்ச்ஞீ ஞீணிஞ்’ என்று சீறினார். “ ஜனநாயகம் என்ற கோவிலை எந்த வெறிபிடித்த நாயும் அசுத்தப்படுத்த மக்கள் அனுமதிக்கக் கூடாது” என்பது அவரது முழக்கம். கூடங்குளம் அணுமின்நிலையத்தை தினம் தோறும் செயல்பட வைப்பதில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கும் அணுவிஞ்ஞானி அமைச்சர் நாராயணசாமி கூட மோடியை விட்டு வைக்கவில்லை.“ அவர் ஒரு நாகரீகமற்ற தலைவர்” என்று திருவாய் மலர்ந்தார்.
மதச்சார்பின்மை என்ற பர்தாவுக்குள் காங்கிரஸ் ஒளிகிறது என்ற கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் வழக்கம்போல் கடும் கண்டனம் தெரிவித்தனர். தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி,“இந்தியாவை பெரும்பான்மை மக்களின் ஆதிக்க நாடாக மாற்ற 64 ஆண்டுகளாக அவர்கள் முயன்றுவருகிறார்கள். வெற்றி கிடைக்க வில்லை. இனியும் கிடைக்காது. அவர்களின் கருத்து சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல பெரும்பான்மையினருக்கும் ஆபத்தே” என்றார்.
திக்விஜய் சிங் சும்மா இருப்பாரா?
“மோடியிடம் மதச்சார்பின்மைக்கு அர்த்தம் என்ன என்று கேட்க விரும்புகிறேன். ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே தேசம் என்பதே ஆர்.எஸ்.எஸ், அத்வானியின் கருத்து. இதுதான் மோடியின் கருத்துமா என்று கேட்க விரும்புகிறேன்” என்றார்.
இதற்கிடையில் மோடிக்கு அமெரிக்கர்கள் விசா கொடுக்கக் கூடாது என்று கோரி இந்திய எம்பிக்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பிய கடித விவகாரமும் சர்ச்சைக்கு உள்ளானது. கையெழுத்திட்டவர்கள் அதில் இருப்பது எங்கள் கையெழுத்து இல்லை என்றனர். இதில் திமுக எம்.பிக்கள் கையெழுத்தும் இருந்ததால் கருணாநிதியும் மறுத்து அறிக்கை விடவேண்டியதாயிற்று.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள் கடந்த சில மாதங்களாக வாயைத் திறந்தால் மோடிக்குப் பதில் சொல்வதை வழக்கமாக கொண்டிருப்பதை உணர்ந்தே என்னவோ காங்கிரஸ் மேல்மட்டத்திலும் அவருக்கு முக்கியத்துவம் அளித்து எல்லோரும் பேசுவதை நிறுத்தவேண்டும் என்று முடிவெடுத்து அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஆனால் மோடியையே முன்னிறுத்தி ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் பிற தலைவர்களை அவர் பின்னால் பதுங்கச் செய்துவிட்டதால் காங்கிரசுக்கோ பிற கட்சிகளுக்கோ இயல்பாகவே மோடியை விமர்சனம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதையும் மறுக்க முடியாது. மோடி பொதுவாக காங்கிரசையும் அதன் நிர்வாகத்தையுமே விமர்சிக்கிறார். ராகுல்காந்தியின் பெயரைச் சொல்லாமல் அவரை இளவரசர் என்று கிண்டல் செய்கிறார். தேவையில்லாத விளம்பரம் எதையும் அவர் எதிராளிகளுக்குக் கொடுப்பதில்லை.
“1971 தேர்தல் காலகட்டத்தில் இந்திராவை எதிர்த்து காங்கிரஸ்(ஓ) தலைவர்கள் பேசி அவருக்குப் பெரும் முக்கியத்துவத்தைக் கொடுத்தார்கள். தமிழ்நாட்டில் 1972-ல் எம்ஜிஆர் பிரிந்தபிறகு திமுக அவரை விமர்சித்தே வளர்த்துவிட்டது. மோடியையும் காங்கிரசார் தாக்கியே அவரை வளர்த்துவிட்டிருக்கிறார்கள்” என்று சொல்லும் பெயர் வெளியிட விரும்பாத ஓர் அரசியல் விமர்சகர், “அரசியலைப் பொறுத்தவரை காய்த்த மரம் தான் கல்லடி படும். கவனிக்கப் படும் தலைவர்தான் விமர்சிக்கப்படுவார். மோடியை சும்மா சும்மா விமர்சிப்பதன் மூலம் அவரை முக்கிய தலைவராக பாஜகவை விட காங்கிரஸ்தான் அதிகம் முன்னிறுத்துவதாகத் தோன்றுகிறது” என்கிறார்.
போகிறபோக்கைப் பார்த்தால் காங்கிரஸ்காரர்கள் மோடியைப் பிரதமராக்கிவிட்டுத்தான் தூங்குவார்கள் போலிருக்கிறதே...
செப்டம்பர், 2013